விருதுநகர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தம்பதியர் தீக்குளிக்க முயற்சி


விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வயதான தம்பதியர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, முதியோர் உதவித் தொகை, மகளிர் உரிமைத் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஏராளமானோர் மனுக்கொடுத்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு திடீரென வயதான தம்பதிகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றனர்.

இதைப் பார்த்த போலீஸார் ஓடிச்சென்று மண்ணெண்ணெய் கேனை பறித்துக்கொண்டதோடு, தம்பதிகளை மீட்டு அவர்கள் மீது தண்ணீரை உற்றினர். விசாரணையில் அவர்கள், எரிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அனந்தப்பன் (62), அவரது மனைவி சாந்தாதேவி (60) என்பதும், சிலர் இவர்களது நிலத்தை மோசடி செய்து அபகரித்துக்கொண்டதால் மனம்வெறுத்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து அனந்தப்பன் கூறுகையில், "தனக்குச் சொந்தமாக 1.60 ஏக்கர் நிலம் இருந்தது. அதில், 60 சென்ட் நிலத்தை மட்டும் கடந்த 2017ல் ரவி என்பவருக்கு விற்றேன். ஆனால், தற்போது முழு நிலத்தையும் அவர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். அதையடுத்து, தற்கொலைக்கு முயன்ற அனந்தப்பனையும் அவரது மனைவி சாந்தாதேவியையும் சூலக்கரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தி, எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

x