கி.தனபாலன்
ராமநாதபுரம்: தொண்டியில் புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பெருமானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்(42). இவர் சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக இவருக்கும், இவரது உறவினர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேல்முருகன் அளித்த புகாரில் உறவினர் மீதும், உறவினர் கொடுத்த புகாரில் வேல்முருகன் மீதும் தொண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் உறவினர் ஒருவர் வேல்முருகன் மீது கொடுத்த புகார் விசாரணையில் இருந்துள்ளது.
இந்நிலையில் இந்த புகாரில் வழக்கு பதிவு செய்யாமல் இருக்கவும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் வேல்முருகனுக்கு காவல்நிலைய ஜாமீன் வழங்குவதற்காகவும், தொண்டி சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ரூ. 3 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். பின்னர் ரூ. 2 ஆயிரம் தருவதாக வேல்முருகன் ஒத்துக்கொண்டார். இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத வேல்முருகன், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் அளித்த ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை நேற்றிரவு வேல்முருகன் தொண்டி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேக்கரி ஒன்றில் சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் கையும், களவுமாக சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.