சென்னை: வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்த மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 3 இளம்பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 9-ம் தேதி வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மத்திய போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மத்திய போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தென் அமெரிக்கா பொலிவியாவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் சந்தேகத்துகிடமாக வந்த பொலிவியா நாட்டு பெண் பயணியை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, அந்த இளம்பெண் அணிந்திருந்த கம்பளி ஆடைக்குள் 10-க்கும் மேற்பட்ட பொட்டலங்களில் 1.8 கிலோ கொக்கைன் போதைப் பொருட்கள் மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து, விமான நிலையத்தில் கண்காணித்த அதிகாரிகள், மும்பையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பிரேசில் நாட்டு இளம் பெண், இந்திய பெண் என 2 பேரை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 15 கிராம் கொக்கைன் போதைப் பொருள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், மூவரிடமும் விசாரணை நடத்தினர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், நெதர்லாந்து நாட்டில் இருந்து சரக்கு விமானத்தில் வந்த பார்சலை பறிமுதல் செய்து சோதனை நடத்தினர். சோதனையில், அந்த பார்சலில் 1.4 கிலோ எம்டிஎம்ஏ எனப்படும் போதைப் பொருள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும், அந்த பார்சலில் இருந்த முகவரியை வைத்து, புதுச்சேரி மற்றும் பெங்களூரு சென்ற அதிகாரிகள் அங்கு நைஜீரியா நாட்டை சேர்ந்த இரண்டு பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து மத்திய போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ”இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.22 கோடி ஆகும். போதைப் பொருள் விவகாரத்தில் 4 வெளிநாட்டவர் உள்பட 5 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? எங்கெல்லாம் போதைப் பொருட்கள் விற்பனை நடந்துள்ளது? என்பது குறித்து போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலிடம் விசாரணை நடத்தி வருகிறோம்” இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.