ரவுடி தீபக் ராஜா சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு; இறுதிசடங்குக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!


தீபக் ராஜா

பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் சடலம், ஒரு வாரத்துக்குப் பிறகு இன்று காலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள தனியார் உணவகம் முன்பு கடந்த 20ம் தேதி, தீபக் ராஜா (35) என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கெனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில் முன் விரோதத்தில் இவர் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

சிசிடிவியில் பதிவான தீபக்ராஜா கொலை சம்பவம்

இந்த கொலை சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவானது. இந்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாமல் உடலை வாங்கப்போவதில்லை என கூறி தீபக் ராஜாவின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தீபக் ராஜா கொலை வழக்கில் இதுவரை 8 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

தீபக் ராஜா சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இதையடுத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த தீபக்ராஜா சடலம் அவரது உறவினர்களிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது.

அங்கிருந்து அவரது சொந்த ஊரான வாகைக்குளத்துக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்கு செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளில் மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்கு நெல்லை மாவட்ட போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

x