திருப்பதி அருகே சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் கார் பயங்கரமாக மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கவலைக்கிடமான முறையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திரா மாநிலம், நெல்லூர் இந்துகூர்பேட்டைடையைச் சேர்ந்தவர்கள் திருப்பதி கோயிலுக்கு காரில் சென்றனர். இதன் பின் அவர்கள் சித்தூர் மாவட்டம், காணிப்பாக்கத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலுக்கு காரில் புறப்பட்டுச் சென்றனர். அவர்களது கார் சந்திரகிரி மண்டலம், எம்.கெங்காரவாரப்பள்ளி அருகே இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது சித்தூர்- நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் அவர்கள் சென்ற கார் பயங்கரமாக மோதியது.
இதில் கார் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த நான்கு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த போலீஸார் மற்றும் மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்," நெல்லூரில் இருந்து வேலூருக்கு காரில் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. காரில் இருந்த ஆறு பேரில் 4 பேர் உயிர் இழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் காயமடைந்தவர்கள் திருப்பதியில் உள்ள ரூயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்" என்றனர். இந்த விபத்து காரணாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.