வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி; முன்னாள் பாஜக நிர்வாகி கைது!


விநாயகமூர்த்தி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 37 பேரிடம் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணிகளை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த முன்னாள் பாஜக மாநில நிர்வாகியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாஜகவின் முன்னாள் மாநில நிர்வாகி விநாயகமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. மத்திய அரசின் துறைகளான ரயில்வே துறையில் சேலம் மண்டலத்தில் 35 பதவிகள் காலியாக இருப்பதாகவும், அதற்கு ஒரு நபருக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரே மாதத்தில் வேலை வாங்கித் தருவதாக ரவியிடம், விநாயகமூர்த்தி கூறியுள்ளார். இதை நம்பிய ரவியும் அவரது நண்பர் நடராஜனும், தங்களுக்கு தெரிந்த நபர்களிடம் மத்திய அரசு வேலைக் குறித்து கூறியுள்ளனர்.

நிதி மோசடி

அதன்படி ரயில்வே வேலைக்காக 35 நபர்களிடம் 31 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று, கள்ளக்குறிச்சியை அடுத்த நீலமங்கலம் கிருஷ்ணா நகரில் வைத்து விநாயகமூர்த்தியிடம் ரவி கொடுத்துள்ளார். அதேபோல் கிஷான் ரேஷன் கடைக்கு இரண்டு பேரிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு அதனை விநாயகமூர்த்தியின் உதவியாளரான பாலாவிடம் ரவி கொடுத்துள்ளார். இதன்மூலம் விநாயகமூர்த்தி மத்திய அரசின் துறைகளில் வேலை வாங்கி தருவதாக 37 பேரிடம் மொத்தமாக 33 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி உள்ளார். ஆனால் அதன் பிறகு விநாயகமூர்த்தி கூறியபடி மத்திய அரசின் துறைகளில் 37 பேருக்கும் எந்த விதமான வேலைகளையும் வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

வேலை மோசடி

மேலும் ரவியும் நடராஜனும் பலமுறை சென்று பணத்தைக் கேட்டும் விநாயகமூர்த்தி பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் பணத்தை கேட்டு வரும் ரவி மற்றும் நடராஜனையும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ரவி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விநாயகமூர்த்தியின் உதவியாளர் பாலா உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்து, விநாயகமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

x