கட்டுக்கட்டாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்... அதிமுக பிரமுகர் கைது!


ஒரு கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள சபீர்

கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சபீர் என்பவர் வீட்டில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கோகுலநாதன் என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் நேற்று சபீர் வீட்டிற்கு சென்ற போலீஸார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் சபீர் வீட்டில் கடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சபீர்

அவற்றை எண்ணியதில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் விசாரணைக்காக சபீரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் கோகுலநாதனையும் அழைத்து சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சபீர், பாலாஜி மற்றும் கோகுலநாதன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது, இவர்களிடம் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. இதனை மாற்றி கொடுப்பதாக சபீர் தனது பங்குதாரர்களிடம் கூறி செல்லாத நோட்டுகளை வாங்கி இருக்கிறார்.

ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் ரூபாய் நோட்டுகளை, சபீர் மாற்றி கொடுக்கவில்லை. பணத்தை கொடுத்தவர்களில் பாலாஜி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். பல ஆண்டுகள் ஆகியும் பணத்தை திருப்பி கொடுக்காதது குறித்து சபீரிடம் கோகுலநாதன் கேட்டுள்ளார். அப்போது பணம் தன்னிடம் அப்படியே இருப்பதாகவும், இதனை மாற்றுவதற்காக முயற்சி செய்த வகையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த பணத்தை கொடுத்து விட்டு ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்லுமாறு சபீர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோகுலநாதன், சபீர் வீட்டில், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தது தெரியவந்தது.

அம்மாபேட்டை காவல் நிலையம்

இதையடுத்து போலீஸார், மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக சபீரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தது தொடர்பாக கோகுல்நாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பணம் வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், வருமானவரித்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்துவார்கள் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே சபீர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சாட்டையால் அடிவாங்கும் விநோத திருவிழா... பயபக்தியுடன் குவிந்த பக்தர்கள்

இன்று தேசிய சகோதரர்கள் தினம்... அண்ணன் - தம்பியாக பிறந்தவர்களும், வாழ்பவர்களும் கொண்டாட வேண்டிய தினம்!

x