இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் தொடரும் போரில், இஸ்ரேல் பிரதமர் மற்றும் ஹமாஸ் தலைவர்கள் உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) வழக்கறிஞர் கரீம்கான் என்பவர், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் மூன்று ஹமாஸ் தலைவர்கள் ஆகியோர் மீது போர்க்குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக, கைது வாரண்ட் பிறப்பிக்கக் கோரியுள்ளார். இவர்களின் போர்க்குற்றங்கள் மனிதகுலத்துக்கே எதிரானவை என்றும், குற்றம்சாட்டப்பட்ட ஐவரும் குற்றத்துக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
கடந்தாண்டு அக்டோபர் 7 அன்று, இஸ்ரேலுக்குள் அத்துமீறி ஊடுருவிய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் கடத்திச்செல்லப்பட்டனர். இதற்கு எதிராக காசா மீதான போர் நடவடிக்கையை அறிவித்த இஸ்ரேல், இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேலானவர்களை கொன்று குவித்துள்ளது. ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுவினரை விட இந்த தாக்குதலில் பலியானவர்களில் அப்பாவி பொதுமக்களே அதிகம்.
இருதரப்பினர் இடையிலான போரில் அப்பாவி பொதுமக்கள் சாவதும், எஞ்சியுள்ளோர் நடைபிணமாவதும் சர்வதேச சமூகத்தை உலுக்கி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவை இஸ்ரேலுக்கு தீவிர ஆதரவை வழங்கி வருகின்றன. மறுபுறம் ஹமஸ் ஆயுதக்குழுவினருக்கு ஈரான் ஆயுதங்கள், பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கி ஊக்குவித்து வருகிறது. முடிவற்று நீளும் இந்த போரால், காசா பிராந்தியம் மீளவே இயலாத சிதிலத்துக்கு ஆளாகி வருகிறது.
இதனிடையே சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில், போர் குற்றங்களில் ஈடுபடும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிரான புகார்கள் கவனம் பெற்றுள்ளன. இஸ்ரேல் தரப்பு மட்டுமன்றி ஹமாஸ் தரப்பில் அதன் தலைவர் யஹ்யா சின்வார், ராணுவப் பிரிவின் தளபதி முகமது அல்-மஸ்ரி, அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஆகியோருக்கு எதிராகவும் கைது வாரண்டுகள் கோரப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாகவும் இதே போன்று போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தபோது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய தலைவர்கள், தாங்கள் போர்க்குற்றங்கள் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளனர். தற்போதைய கைது வாரண்ட் பிறப்பிக்க கோரும் விவகாரத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்டுகளை பிறப்பித்தாலும் அவற்றை அமல்படுத்த எந்த வழியும் இல்லை. குறிப்பாக ஐசிசியின் 124 உறுப்பு நாடுகளில் இஸ்ரேல் அங்கம் வகிக்கவில்லை.
ஆனால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினரின் போர் வேகத்தை தணிக்கும் சர்வதேச அழுத்தமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அடுத்த சுற்று சமரச பேச்சுவார்த்தை முதல் இடைக்கால போர் நிறுத்தம் வரை இருதரப்புக்கும் நெருக்கடி தர இந்த ஏற்பாடு உதவக்கூடும்.
இதையும் வாசிக்கலாமே...
சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!
பெட்ரோல் பங்கில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து; வைரலாகும் வீடியோ!