புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தாக்கலான மனு... அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்


உச்ச நீதிமன்றம்

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக பொதுநல மனு தாக்கலானதில், உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு பிறப்பித்தது.

இந்தியாவின் தண்டனைச் சட்டங்களை மாற்றியமைக்க 3 புதிய சட்டங்கள் இயற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி காட்டியது.

கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி மக்களவையில் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய மசோதா ஆகிய மூன்று முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜனாதிபதி திரௌபதி முர்மு டிசம்பர் 25 அன்று இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார். இந்த 3 புதிய சட்டங்களும் முறையே இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய நடப்பில் உள்ளவற்றை மாற்றும்.

மக்களவையில் தாக்கலான 3 புதிய குற்றவியல் சட்டங்கள்

நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன்பாக, 3 குற்றவியல் சட்டங்களுக்கும் எதிரான பொது நல வழக்கு தாக்கலானது. மனுதாரர் வழக்கறிஞர் விஷால் திவாரி மனுவை சமர்ப்பித்தார். பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கத்தில் இருப்பதால் அவை எந்த நாடாளுமன்ற விவாதமும் இன்றி இயற்றப்பட்டதாகக் பொதுநல வழக்கு கூறியது. மேலும் புதிய குற்றவியல் சட்டங்களின் நம்பகத்தன்மையை மதிப்பிடும் நிபுணர் குழுவை உடனடியாக அமைப்பதற்கும் இந்த மனு கோரியது.

ஆனால் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இந்த சட்டங்கள் இதுவரை அமலுக்கு வரவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்ற அமர்வின் அதிரடியை அடுத்து, மனுதாரர் தரப்பில் மனுவை வாபஸ் பெற அனுமதிக்குமாறு கோரினார்கள். அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து பொதுநல மனு வாபஸ் பெறப்பட்டது

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி)

தாக்கல் செய்யப்பட்டிருந்த பொதுநல மனுவில் "புதிய குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை. உண்மையில் இவை ஒரு போலீஸ் அரசை நிறுவுகின்றன மற்றும் இந்திய மக்களின் அனைத்து அடிப்படை உரிமைகளையும் மீறுகின்றன. பிரிட்டிஷ் காலனித்துவ சட்டங்கள் கொடூரமானவை என கருதப்பட்டால், புதிய இந்திய சட்டங்கள் இப்போது மிகவும் கொடூரமானவையாக இருக்கின்றன. பிரிட்டிஷ் காலத்தில், ஒருவரை அதிகபட்சமாக 15 நாட்கள் காவலில் வைத்திருக்கலாம். அதையே 90 நாட்கள் வரை நீட்டிப்பது என்பது போலீஸ் சித்திரவதைக்கு உதவும் ஒரு அதிர்ச்சியூட்டும் விதியாகும்” என்று தெரிவிக்கப்படிருந்தது.

மேலும், “தேசத்துரோகத்தை கையாளும் ஐபிசி பிரிவு 124ஏ-ன் படி, குற்றத்தில் ஈடுபட்ட எவருக்கும் ஆயுள் தண்டனை அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மேலும், முதன்முறையாக, ’பயங்கரவாதம்’ என்ற வார்த்தை பாரதிய நியாய சன்ஹிதாவில் வரையறுக்கப்பட்டுள்ளது. இது பழைய ஐபிசியில் இல்லை. புதிய சட்டங்களின்படி, அபராதம் விதிக்கும் மாஜிஸ்திரேட்டின் அதிகாரமும், குற்றவாளியாக அறிவிக்கப்படும் வாய்ப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது” என்றும் அந்த பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் வாசிக்கலாமே...

பெட்ரோல் பங்கில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து; வைரலாகும் வீடியோ!

ஈரான் அதிபர் விபத்தில் பலி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு... பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய மக்கள்!

x