கிருஷ்ணகிரி அருகே பகீர் விபத்து... பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி பேருந்து


இருசக்கர வாகனம் மீது மோதிய தனியார் கல்லூரி பேருந்து

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இது தொடர்பான அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், குட்டப்பநாயக்கனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகன் சந்தனப்பாண்டியன். இவர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சந்தனப்பாண்டியன் தனது தாயார் பூங்கொடியுடன் பர்கூர் அடுத்த தபால்மேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

சாலை விபத்து

இந்நிலையில் கண்டிகுப்பம் அடுத்த பையனூர் என்ற இடத்தில் இவர்கள் வந்துகொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து, சாலையோரம் சென்ற சந்தனப் பாண்டியன் வாகனத்தின் மீது மோதியது.

இதில் தாயும், மகனும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தை கண்ட அப்பகுதியினர் இருவரையும் மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கீழே விழுந்த தாய்-மகன்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து அறிந்த கண்டிகுப்பம் போலீஸார், விபத்தை ஏற்படுத்திய தனியார் கல்லூரி பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பதைபதைக்க வைக்கும் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

x