மற்றுமொரு ‘நீட் தேர்வு’ மோசடிக் கும்பல் சிக்கியது... 2 மருத்துவ மாணவர்கள் உட்பட 4 பேர் டெல்லியில் கைது!


நீட் தேர்வு மோசடிக்கான முகவர்கள்

மற்றுமொரு நீட் தேர்வு மோசடிக் கும்பல் தலைநகர் டெல்லியில் பிடிபட்டுள்ளது. இதில் 2 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தரமான மருத்துவர்களை உருவாக்கும் முயற்சி என்ற பெயரில் தேசிய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு அறிமுகமானது. அந்த தேர்வு எழுதுவதில் தேர்வர்களை அச்சுறுத்தும் அளவுக்கு கெடுபிடிகள் நிலவுவதாக புகார்களும் நிலவுகின்றன. நீட் நுழைவுத்தேர்வு மோசடிகளை தடுக்கும் மற்றும் தவிர்க்கும் நோக்கினாலான கட்டுப்பாடுகள் என்ற பெயரில் அவை கடுமையாக அமல்படுத்தப்படுவதுண்டு. ஆனபோதும் இந்த நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்தின் பெயரில் அதிகளவிலான மோசடிகள் அரங்கேறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

நீட் தேர்வு முறைகேடு

உண்மையான தேர்வருக்கு பதிலாக, நீட் தேர்வெழுதி மருத்துவக் கல்லூரிக்கு தேர்வான மாணவர்களை முறைகேடாக பயன்படுத்தி இந்த ஆள்மாறாட்ட மோசடிகள் நடக்கின்றன. அப்படியொரு மோசடிக் கும்பல் இன்று டெல்லியில் வளைக்கப்பட்டுள்ளது. அதில் 2 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 5 அன்று திலக் மார்க் பகுதியில் அமைந்துள்ள பாரதிய வித்யா பவன் மேத்தா வித்யாலயாவில் நடந்த நீட் தேர்வின் போது ஒரு மாணவரின் பயோமெட்ரிக் தரவு பொருந்தாதது தொடர்பான விசாரணையில் இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது.

இதுகுறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் தேவேஷ் குமார் மஹ்லா கூறுகையில், ”2 ஆள் மாறாட்ட மருத்துவ மாணவர்களான சுமித் மண்டோலியா மற்றும் கிரிஷன் கேசர்வானி ஆகியோர் நீட் தேர்வு மையத்தில் பிடிபட்டனர். குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இன்ஸ்பெக்டர் சஞ்சய் குமார் குப்தா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர் விசாரணையின் போது, ​​எம்பிபிஎஸ் மாணவர்கள் இருவரும், நேற்று நொய்டாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பிடிபட்டனர். இந்த மருத்துவ மாணவர்களை பின்னிருந்து இயக்கியதாக பிரபாத் குமார், கிஷோர் லால் என மருத்துவக்கல்லூரி சேர்க்கை அதிகாரிகளாக பணியாற்றும் இருவர் பிடிபட்டனர்” என்று தெரிவித்தார்.

நீட் தேர்வு

ஆள் மாறாட்ட மோசடிகளுக்கு தலா ரூ.25 லட்சம் இவர்கள் வசூலிப்பதாகவும், புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் திருத்துவதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மோசடி மருத்துவ மாணவர்களான மண்டோலியா மற்றும் கேசர்வானி ஆகியோர் ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த வெவ்வேறு கல்லூரிகளின் எம்பிபிஎஸ் மாணவர்கள் ஆவர். இந்த இருவர் உட்பட 4 பேர்களிடமும் அவர்கள் இதற்கு முன்னதாக நிகழ்த்திய முறைகேடுகள் குறித்து டெல்லி போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x