முன்னாள் துணை வேந்தர் வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளை... மர்ம நபர்கள் கைவரிசை!


கொள்ளை சம்பவம் நிகழ்ந்த முன்னாள் துணை வேந்தர் சுகுமாரின் வீடு

தூத்துக்குடியில் முன்னாள் துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி சின்னமணி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சுகுமார். இவர் நாகப்பட்டினம் ஜெ.ஜெயலலிதா மீன் வள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி புனிதா சென்னையில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், மற்றொருவருக்கு வரன் பார்த்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கொள்ளை சம்பவம் நிகழ்ந்த முன்னாள் துணை வேந்தர் சுகுமாரின் வீடு

இந்நிலையில் சுகுமார், கடந்த 10ம் தேதி குடும்பத்தினரை பார்ப்பதற்காக சென்னை சென்றிருந்தார். தூத்துக்குடி சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த அமுதா என்ற பெண் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். நேற்று வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு அவர் கிளம்பிய நிலையில், இன்று காலை மீண்டும் வீட்டை சுத்தம் செய்வதற்காக வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சென்னையில் உள்ள சுகுமாருக்கு அவர் தகவல் அளித்தார்.

கொள்ளை சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை

சுகுமார், தென்பாக்கம் காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் போலீஸார், மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் ஆகியோருடன் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது சுகுமார் வீட்டில் இருந்து அவரது மகள் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 100 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் மதில் சுவரைத் தாண்டிக் குதித்து வந்து வீட்டின் முன்பக்க கிரில் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த இரண்டு லாக்கர்களில் இருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x