திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டசேரி கிராமத்தில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான வீட்டில், அவரது மனைவி ஜேன் பெலிக்ஸ் முன்னிலையில் திருச்சி காவல்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபரான சவுக்கு சங்கர் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது பேட்டிகளை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் நிர்வாகியான பெலிக்ஸ் ஜெரால்டு என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இருவர் மீதும் சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட போது அவரது காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து தேனி போலீஸார் இது தொடர்பாக தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள சங்கரின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் போலீஸார் சோதனை நடத்தியிருந்தனர். இதனிடையே டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்ட பெலிக்ஸ், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில தினங்களாக போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டசேரி என்னும் கிராமத்தில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் தற்காலிக கண்டெய்னர் வீட்டில் சோதனை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். இதன்படி நேற்று, அவரது மனைவி ஜேன் பெலிக்ஸை அழைத்து சென்று, அவர் முன்னிலையில் திருச்சி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது.