அடிதடி தகராறு - ஒடிசா காங்கிரஸ் வேட்பாளர் கைது!


காங்கிரஸ் வேட்பாளர் சாகா சுஜித் குமார்

ஒடிசா மாநிலம், திகபாஹண்டி சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சாகா சுஜித் குமார், அடிதடி தகராறில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தில் உள்ள திகபாஹண்டி சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சாகா சுஜித் குமார். இவர் தனது கட்டுமான தொழில் போட்டியாளர் ஒருவரை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பெர்ஹாம்பூர் காவல் நிலைய போலீஸார், சாகா சுஜித் குமாரை நேற்று கைது செய்தனர்.

போலீஸ் விசாரணை

இந்த விவகாரம் தொடர்பாக கஞ்சம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சர்தக் சாரங்கி, கூறியதாவது, "சாகா சுஜித் குமார் தரப்பு தாக்கியதில் கட்டிடத் தொழிலாளியான சிஹாலாவைச் சேர்ந்த சுதன்சு சங்க்ராம் பதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

குக்குடகண்டியில் உள்ள ஒரு ப்ளாட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது சுதன்சு சங்க்ராம் பதியின் ஊழியர்கள் தாக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சுதன்சு சங்க்ராம் பதியும், அவரது கூட்டாளிகளும் புகார் அளிக்க காவல் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, காங்கிரஸ் வேட்பாளர் சாகா சுஜித் குமார் தனது ஆட்களுடன் வந்து அவர்களை மீண்டும் தாக்கியுள்ளார்.

கைது

வேட்பாளர் சாகா சுஜித் குமாருடன் அவரது உதவியாளர் அமித் குமாரும் கைது செய்யப்பட்டுள்ளார். அமித் குமார் ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட தொழில்முறை போட்டியே இந்த சம்பவத்துக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது” என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்.

ஒடிசாவில் 21 மக்களவைத் தொகுதிகளுக்கும், 147 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் மே 13 முதல் ஜூன் 1 வரை 4 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

சவுக்கு சங்கர் வழக்கு... பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்!

ஓடுபாதையில் விமானம் மீது மோதிய டிரக்; உயிர் தப்பிய 180 பயணிகள்; புனேவில் பரபரப்பு!

x