விழுப்புரம் அருகே திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவிற்கு கொடியேற்ற தடை விதிக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மேட்டுத்தெரு பகுதியில் 150 ஆண்டு பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இதில் பல்வேறு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் 21 நாள் திருவிழாவை நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு இக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதையடுத்து கோயில் நிர்வாகிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், கடந்த வாரம் பழைய முறைப்படி திருவிழா நடத்தலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கோயில் நிர்வாகிகள் இன்று கொடியேற்றுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால் செயல் அலுவலர் பல்வேறு காரணங்களை கூறி கொடியேற்ற வேண்டாம் என தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மரக்காணம் பகுதி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மரக்காணம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...