வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!


உயிரிழந்த அமித் குமார்

தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதாக மனைவியை வீடியோ காலில் மிரட்டிய ஜிம் பயிற்சியாளர், கயிறு கழுத்தில் இறுகி உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிஹார் மாநிலம், தாசரஹள்ளியைச் சேர்ந்தவர் அமித் குமார்(28). இவர் பெங்களூருவில் ஜிம் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளம்பெண்ணை ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து அமித் குமார் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

திருமணம்

திருமணத்திற்குப் பிறகு அமித் குமாரின் மனைவி, நர்சிங் படித்து வந்தார். இதன் பின் அவருக்கு பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியர் பணி கிடைத்தது. இதன் பிறகு அவரது தோழிகளுடன் செல்போனில் அதிக நேரம் அவர் அரட்டை அடித்து வந்துள்ளார். இது தொடர்பாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் கணவனை விட்டுப் பிரிந்து அமித் குமாரின் மனைவி வேறு இடத்தில் வசித்து வருகிறார்.

இதனால் மனமுடைந்த அமித் குமார் தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து பலமுறை அழைத்துள்ளார். ஆனால், அவருடன் சேர்ந்து வாழ முடியாது என அவரது மனைவி கூறியுள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை தனது மனைவிக்கு அமித் குமார், வீடியோ கால் செய்துள்ளார்.

"நீ வீட்டுக்கு வராவிட்டால், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வேன்" என்று மிரட்டினார். அப்போது ஹாலில் கயிற்றைக் கட்டி அதில் கழுத்தை மாட்டியிருந்தார். அப்போது திடீரென அவரது கையில் இருந்த செல்போன் தவறி கீழே விழுந்தது. அதைப் பிடிக்க முயன்ற அமித் குமாரின் கழுத்து தூக்குக் கயிற்றில் மாட்டிக் கொண்டது. இதில் கழுத்து நெரிபட்டு அமித் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த அமித் குமார்

இந்த தகவல் அறிந்த பகல்குண்டே காவல் நிலைய போலீஸார், விரைந்து சென்று அமித் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை மிரட்டுவதாக தூக்குப்போட்டு நடித்த இளைஞர், அந்த கயிற்றிலேயே உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x