ஷாக்... இந்து இளைஞரை திருமணம் செய்த முஸ்லிம் பெண் மீது கொலைவெறி தாக்குதல்!


தாக்குதலுக்குள்ளான சைனஜா பேகம், தாக்கிய கும்பல்

இந்து இளைஞரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன் வீடு புகுந்து ஆயுதங்களால் தாக்கி ஒரு கும்பல் கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் கடக் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கடக் மாவட்டத்தில் உள்ள பெடகேரியில் ஆசிரா காலனியைச் சேர்ந்தவர் சைனஜா பேகம். இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கொரோனாவால் இவரது கணவர் உயிரிழந்தார். இந்த நிலையில். சிறு குழந்தைகளுடன் வசித்து வந்த சைனஜா பேகம், அப்பகுதியைச் சேர்ந்த இந்து இளைஞருடன் பழகியுள்ளார். அவரும் சைனஜா பேகத்தை விரும்பியுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம்

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சைனஜா பேகத்தை லியாகத் அல்தாப், சையத் உள்ளிட்ட பலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். அத்துடன் சைனஜா பேகத்தை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் சைனஜா பேகம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு சைனஜா பேகம் வீட்டிற்குள் லியாகத், அல்தாப் சையத், ரியாஸ், ஜாவீத் ஆகியோர் புகுந்தனர். அவர்கள் சைனஜா பேகம் மற்றும் அவரது மகள்கள் மற்றும் மகன் சதாம் ஆகியோரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தை அணுகியுள்ள சைனஜா பேகம், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கண்ணீர் பொங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக .லியாகத் மற்றும் அல்தாப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெடகேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x