பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!


கவுகாத்தியில் பொறியாளர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.500 நோட்டு கட்டுகள்

அசாம் மாநிலம், கவுகாத்தியில் லஞ்ச ஒழிப்புத் துறை நேற்று, மூத்த பொறியாளர் ஒருவரின் இல்லத்தில் நடத்திய சோதனையில் சுமார் ரூ.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அசாம் மாநிலம், கவுகாத்தியில் அரசு பொறியாளர் ஒருவர் லஞ்சம் வாங்குவதாக, அம்மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வடக்கு லக்கிம்பூர் வட்டத்தில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சென்று ஜெயந்தா கோஸ்வாமி என்ற செயற்பொறியாளரை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு சொந்தமாக ஹெங்கரபாரியில் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரூ.500 நோட்டு கட்டுகள் கத்தை கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கவுகாத்தியின் ஹெங்கரபாரியில் அரசு பொறியாளர் ஜெயந்தா கோஸ்வாமி வீட்டில் சோதனையிட்டபோது, ரூ.79,87,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கத்தை கத்தையாக ரூ.500 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் தொடர் விசாரணையில் பில் தொகைகளை வழங்குவதற்கு ஜெயந்தா கோஸ்வாமி லஞ்சம் கேட்டதால், பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ரூ.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கவுகாத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x