ஆபாச வீடியோக்கள் சர்ச்சை... பிரஜ்வலின் வீடியோக்களை மக்களிடம் பகிர்ந்த பாஜகவினர் கைது!


கைது செய்யப்பட்டுள்ள பாஜக நிர்வாகிகள் சேத்தன் மற்றும் லிக்கித் கெளடா

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்களை பொதுமக்களிடம் பென்டிரைவ் மூலம் பரப்பியதாக, இரண்டு பாஜகவினரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர்.

கர்நாடகாவில் ஹாசன் தொகுதியின் மக்களவை உறுப்பினராக பதவி வகித்து வருபவர் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பிரஜ்வல் ரேவண்ணா. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான இவர் ஏராளமான பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாக புகார் எழுந்தது. கடந்த ஏப்ரல் 26ம் தேதி கர்நாடகாவில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது இவரது ஆபாச வீடியோக்கள் வேகமாக வாக்காளர்களிடையே பரவியது.

பிரஜ்வல் ரேவண்ணா

இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரஜ்வல் தலைமறைவாக உள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை மாநில அரசு அமைத்துள்ளது. இந்த சிறப்பு புலனாய்வு குழு பல்வேறு தரப்பு நபர்களிடம் ஆபாச வீடியோக்கள் பரவியது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாஜகவைச் சேர்ந்த சேத்தன் மற்றும் லிக்கித் ஆகிய இருவரை போலீஸார் விசாரணைக்காக அழைத்திருந்தனர்.

மகன் பிரஜ்வல் ரேவண்ணா - தந்தை எச்.டி.ரேவண்ணா

சேத்தனின் சொந்த ஊரான எலகுண்டாவுக்கும், லிக்கித் கௌடாவின் சொந்த ஊரான சரவணபெலகொலாவுக்கும், போலீஸார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 2,900 மேற்பட்ட வீடியோக்கள் பிரஜ்வல் ரேவண்ணாவால் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும், பாஜகவும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

x