494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் தற்கொலை... மதிப்பெண்கள் குறைந்ததாக விபரீதம்!


உயிரிழந்த மாணவர் ஜெயவர்மன்

கம்பத்தில் 12ம் வகுப்பில் 494 மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவன், மதிப்பெண் குறைந்து விட்டது என்ற வருத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் ஜெயவர்மன் (17). இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மாணவர் ஜெயவர்மன், 600க்கு 494 மதிப்பெண்களை எடுத்திருந்தார். தான் 500 மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டும் என நினைத்திருந்ததாகவும், ஆனால் 500க்கு மேல் வாங்க முடியவில்லை என ஜெயவர்மன், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

மருத்துவமனையில் கவலையுடன் திரண்டிருந்த ஜெயவர்மனின் உறவினர்கள், நண்பர்கள்

இதனால் பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாணவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில், மதியம் வரை அவரை காணவில்லை. இதனால் வீட்டின் மூன்றாவது மாடிக்கு சென்று பெற்றோர் தேடி உள்ளனர். அப்போது மூன்றாவது மாடியில் மாணவர் ஜெயவர்மன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கம்பம் காவல் நிலையம்

உடனடியாக இது தொடர்பாக கம்பம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் வரும் என எதிர்பார்க்கப்பட்ட 494 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால், மாணவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பெற்றோர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத்துறை ஹெல்ப்லைன் 104 மற்றும் சினேகா தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் 044-24640050 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

x