மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!


குழந்தையின் சடலத்தை ஆய்வு செய்யும் போலீஸார்

பிறந்து சில நிமிடங்களை ஆன பச்சிளம் குழந்தையை ஐந்தாவது மாடியில் இருந்து வீசி எறிந்து கொலை செய்த குழந்தையின் தாய் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடவந்தரா அருகே பனம்பள்ளி வித்யா நகரில் துப்புரவு பணியாளர்கள் நேற்று குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் சாலையோரம் ஒரு பிளாஸ்டிக் கூரியர் கவர் கிடந்துள்ளது. அதனை எடுத்து திறந்து பார்த்தபோது அதற்குள் பச்சிளம் ஆண் குழந்தை இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள், இதுகுறித்து எர்ணாகுளம் தெற்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை வைக்கப்பட்டிருந்த கூரியர் கவரில் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முகவரி இருந்தது. அதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

சாலையில் கிடக்கும் குழந்தை சடலம், மற்றும் அந்த அடுக்குமாடி குடியிருப்பு

அதில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குழந்தையை சாலையில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் போலீஸார் சோதனை நடத்தியபோது ஒரு வீட்டின் கழிவறையில் ரத்தக்கரை இருப்பதை கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து அந்த வீட்டில் இருப்பவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அவர்களின் விசாரணையில் அந்த வீட்டில் இருந்த 20 வயதுடைய திருமணமாகாத இளம்பெண் ஒருவர் கர்ப்பம் அடைந்தது தெரிய வந்ததும், பெண்ணின் பெற்றோர், தங்களது மகள் கர்ப்பமடைந்ததை வெளியே தெரியாமல் மறைத்து வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்துள்ளனர்.

பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை வைத்துக் கொள்ள விரும்பாத பெண்ணின் பெற்றோர், குழந்தையை கூரியர் கவரில் வைத்து ஐந்தாவது மாடியில் இருந்து கீழே வீசி எரிந்துள்ளனர். இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அதைத்தொடர்ந்து இளம்பெண், அவரது தாய், தந்தை ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

பிறந்து சில நிமிடங்களே ஆன குழந்தை மாடியில் இருந்து வீசி எறிந்து கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

x