புதுக்கோட்டை அருகே திமுக நிர்வாகி அமைத்திருந்த நீர் மோர் பந்தல், மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் கடும் வெயில் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதையொட்டி அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தன்னார்வ அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் நீர்மோர் மட்டுமின்றி குடிநீர் மற்றும் அதிக நீர் சத்துள்ள பழங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டது. இதில் திமுக மாவட்ட நெசவாளர் அணி தலைவர் பழனி சார்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அமரடக்கி பகுதியில் நீர்மோர் பந்தல் ஒன்று திறக்கப்பட்டது. இதில் பகல் வேலைகளில் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு இந்த பந்தல் தீப்பிடித்து எரிவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு இரண்டு தரப்பும் விரைந்து சென்று பார்த்தபோது, பந்தல் முழுவதும் எரிந்து சேதமானது தெரிய வந்தது. மர்ம நபர்கள் சிலர் இந்த பந்தலுக்கு தீ வைத்து சென்றிருக்கலாம் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, திமுக நிர்வாகி ராமநாதன், பழனி உள்ளிட்டோர் சார்பில் ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பந்தலுக்கு தீ வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று திமுகவினர் ஏராளமானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அனைவரையும் அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் 200 பாகிஸ்தான் யாத்ரீகர்கள்... வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்!
நயன்தாரா, சமந்தாவுக்கு போட்டியாக களமிறங்கும் சினேகன் மனைவி; கலாய்க்கும் ரசிகர்கள்!
“நியாயமா ஆண்டவரே...” கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்!
“பயந்து ஓடாதீங்க...” ரேபரேலி விவகாரத்தில் ராகுலை சீண்டிய பிரதமர் மோடி!
செல்போன் லைட்டில் அறுவை சிகிச்சை... தாயும் சேயும் உயிரிழந்த சோகம்!