இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்: தூத்துக்குடியில் 4 பேர் கைது


கைது செய்யப்பட்டவர்கள்

கோவில்பட்டி: வேம்பாரில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் மற்றும் போலீஸார் வேம்பார் கடற்கரை பகுதியில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாட்டுப் படகில் சிலர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தனர்.

அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீஸார் படகை சோதனையிட்டனர். இதில், 84 மூட்டைகளில் தலா 30 கிலோ கொண்ட பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி தாளமுத்து நகர் சிலுவைப்பட்டி சுனாமி காலனியைச் சேர்ந்த தேவசகாயம் மகன் கெனிஸ்டன் (29), குமார் மகன் பனிமயகார்வின்(19), ராமதாஸ் நகர் சுனாமி காலனியைச் சேர்ந்த ராயப்பன் மகன் பொன்சிஸ் ராஜா (37), கருப்பசாமி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் மாதவன் (21) என்பதும், வேம்பார் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த க்யூ பிரிவு போலீஸார், ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை பறிமுதல் செய்தனர்.

x