வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர்... சுற்றி வளைத்து கைது செய்த போலீஸார்!


கைது செய்யப்பட்டுள்ள ராஜேஷ் கண்ணன்

தேனி மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மக்களவைத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தற்போது தேனி கம்மவார் சங்கம் கல்லூரியில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் உதவியுடன், 300-க்கும் மேற்பட்ட போலீஸார் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி கம்மவார் சங்கம் கல்லூரி

வேட்பாளர்களின் முகவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தவிர பிற நபர்கள் யாருக்கும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி அளிக்கப்படுவதில்லை. மேலும் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ட்ரோன்கள் பறக்க விடவும் காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு போலீஸார் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், போலீஸாரின் தடுப்புகளையும் மீறி வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றார்.

ஸ்டிராங் ரூம்

பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்திய போதும், அவர் காவலர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை விசாரணைக்காக போலீஸார் அழைத்து சென்றனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் தேனி கம்மவார் சங்கம் கல்லூரியின் முன்னாள் ஊழியர் என்பதும், அவரது பெயர் ராஜேஷ் கண்ணன் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கொடுவிலார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மதுகண்ணன் என்பவர் கொடுவிலார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ராஜேஷ் கண்ணனை கைது செய்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஈரோடு ஸ்டிராங் ரூமில் மீண்டும் பிரச்சினை... டிஜிட்டல் திரை கோளாறால் அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு

x