நாகப்பட்டினத்தில் இருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 3 பேர் மீது இலங்கை கடற்படையினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து முருகன் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் கடந்த 28-ம் தேதி காலை 11 மணிக்கு மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்த படகில் முருகன் மற்றும் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த லிங்கம், முத்துச்சின்னையன் ஆகியோர் இருந்தனர்.
அவர்கள் 20 நாட்டிகல் மைல் தொலைவில் தென்கிழக்கில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று மாலை 6:30 மணியளவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ஸ்பீட் ஃபைபர் படகில் அடையாளம் தெரியாத 3 பேர் அங்கு வந்துள்ளனர்.
அவர்கள் கைகளில் இருந்த கட்டை மற்றும் கத்தியால் 3 மீனவர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் மீனவர்களிடமிருந்து, ஜிபிஎஸ், வாக்கி டாக்கி, சுமார் 40 கிலோ வஞ்சரம் மீன்கள், மீன்பிடி வலை ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இதில் மீனவர்கள் மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது. குறிப்பாக முருகனுக்கு தலையில் காயம் மற்றும் இடது கையில் ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப முடிவு செய்தனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் கரை திரும்பிய அவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த முருகனுக்கு தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் சக மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கடற்படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு கடற்கொள்ளையர்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.