தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்


ஆசிட் தொட்டியில் விழுந்து மரணம்

சென்னை அருகே உள்ள திருமுடிவாக்கத்தில் எலக்ட்ரோ பிளேட்டர் கம்பெனியில் உள்ள ஆசிட் தொட்டியில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை உருவாக்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் பெருமாள் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார்(20). இவர் கடந்த 20 நாட்களாக குன்றத்தூரில் தங்கி திருமுடிவாக்கம் சிட்கோ பகுதியில் உள்ள சாரதா எலெக்ட்ரோ பிளேட்டர் என்ற கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 25 ஆம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் பிரவீன் குமார் பணியில் ஈடுபட்டிருந்த போது சோடியம் ஹைட்ராக்சைடு ஆசிட் நிரப்பப்பட்ட தொட்டியில் இருந்த மோட்டார் இயந்திரம் தடம் மாறியதால் அதனை சரி செய்ய வேண்டி தொட்டி மீது ஏறி உள்ளார்‌. பின்னர் அந்த இயந்திரத்தை சரி செய்து கொண்டிருந்த போது, பிரவீன் குமார் தவறி ஆசிட் நிரம்பிய தொட்டியில் விழுந்ததால் அவரது உடல் முழுவதும் வெந்து போனது.

பிரவீனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர் .98 சதவீதம் தீக்காயம் அடைந்த பிரவீன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரவீன்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கம்பெனி ஊழியர்கள், மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

மரணம்

தொழிற்சாலையில் உள்ள ஆசிட் தொட்டியில் தொழிலாளி தவறி விழுந்து உடல் வெந்து உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x