தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்


மணிப்பூரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலில் இருவர் பலி, 6 பேர் காயம்

மணிப்பூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில், 2 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்ததோடு, 6க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்தி இனக்குழுக்களுக்கு இடையேயான மோதல் கடந்த ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த வன்முறை காரணமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்தது. ஆயிரக்கணக்கானோர் தங்களது உயிர்களை இழந்ததோடு, ஏராளமான வன்முறை வெறியாட்டமும் நிகழ்ந்துள்ளது. முழுமையாக அமைதி திரும்பாத நிலையில், சமீபத்தில் மக்களவைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டது.

தாக்குதல் நடைபெற்ற இடம்

இதையடுத்து ஏராளமான சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் உள்ள ஒரு பகுதியில் தேர்தல் நடைபெற்றது. பலத்த பாதுகாப்புக்கிடையே பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். இதனிடையே இன்று காலை சிஆர்பிஎப் வீரர்கள் மொய்ராங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரன்சேனா முகாமில் தங்கி இருந்தனர். அப்போது அங்கு வந்த போராளிகள் சிலர் சிஆர்பிஎப் வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நள்ளிரவு 12:30க்கு துவங்கி அதிகாலை 2:15 மணி வரை இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்று உள்ளது. இவர்கள் குக்கி இன போராளிகள் என கூறப்படுகிறது.

சிஆர்பிஎப் வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை

அப்போது போராளிகள் தங்கள் கைகளில் இருந்த கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் துணை ஆய்வாளர் என்.சர்க்கார் மற்றும் தலைமை காவலர் அருப் ஷைனி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த ஆய்வாளர் ஜாதவ் தாஸ் உட்பட 6 பேர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பிஷ்ணுபூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் குறித்த தகவல் அறிந்ததும் கூடுதல் சிஆர்பிஎப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அந்த பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் மணிப்பூரில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

x