பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!


சிறுவர்கள் அழைத்து வரப்பட்ட பேருந்து

பெற்றோரின் சம்மத கடிதம் உட்பட எவ்வித ஆவணங்களும் இன்றி பீகாரிலிருந்து உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 95 சிறுவர்களை குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் மீட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் ஆராரியா பகுதியிலிருந்து உத்தர பிரதேச மாநிலத்திற்கு டபுள் டக்கர் பேருந்து ஒற்றில் 95க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தி செல்லப்படுவதாக குழந்தைகள் நல ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சஹரன்பூர் பகுதியில் உள்ள தேவ்காலி புறவழிச் சாலையில் அந்த பேருந்தை நேற்று தடுத்து நிறுத்தி அதிகாரிகள் மற்றும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பேருந்துக்குள் 95 சிறுவர்கள் இருப்பது தெரியவந்தது.

அவர்களுடன் வந்தவர்களிடம், இந்த சிறுவர்கள் எங்கிருந்து எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற நிகழ்வுகளின் போது குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர்களின் சம்மத கடிதம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஆனால் அது போன்ற எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் இவர்கள் 95 பேரும் கடத்தப்பட்டவர்களாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

சிறுவர்கள் கடத்தப்பட்டார்களா என போலீஸார் தீவிர விசாரணை

இதையடுத்து அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அப்போது பல மாணவர்களும் தாங்கள் எங்கிருந்து எங்கு செல்கிறோம் என்பது தெரியவில்லை எனக் கூறியுள்ளனர். இதனால் இது மிகப் பெரிய குழந்தை கடத்தல் கும்பலின் செயலாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மீட்கப்பட்டுள்ள சிறுவர்கள் அனைவரும் 4 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். பெரும்பாலானவர்களும் இஸ்லாமியர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுவதால் இது உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அந்த சிறுவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டுள்ள காவல்துறையினர், அவர்களிடம் சிறுவர்களை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போல், மதரஸாக்களில் தங்க வைக்கப்பட அழைத்து செல்லப்பட்ட சிறுவர்களை குழந்தைகள் ஆணைய அதிகாரிகள் மீட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

x