ரன்வீர் சிங் காங்கிரஸுக்கு வாக்கு கேட்பது போன்று டீப் ஃபேக் வீடியோ: எக்ஸ் வலைதள வாசி மீது வழக்கு


நடிகர் ரன்வீர் சிங்

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுப்பது போன்று 'டீப்ஃபேக்' வீடியோவைப் பதிவேற்றிய எக்ஸ் வலைதள பயனர் மீது மகாராஷ்டிரா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், 'டீப் ஃபேக்' வீடியோ தொடர்பாக அவரது தந்தை ஜுக்ஜீத் சிங் பாவ்னானி, ‘@sujataindia1st’ என்ற எக்ஸ் வலைதள பயனருக்கு எதிராக மகாராஷ்டிரா சைபர் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து ஜுக்ஜீத் சிங் பாவ்னானி தனது புகார் மனுவில், “ஒரு ஃபேஷன் ஷோவை விளம்பரப்படுத்த வாராணசியில் இருந்தபோது ரன்வீர் சிங் ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்தார்.

'டீப் ஃபேக்' வீடியோ பிரச்சினை

அதில் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி ரன்வீர் சிங், ‘நமது வளமான கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றை கொண்டாடுவதே மோடிஜியின் நோக்கமும் குறிக்கோளும் ஆகும். ஏனெனில் நாம் நவீனத்துவத்தை நோக்கி மிக வேகமாக முன்னேறி வருகிறோம். ஆனால் நமது வேர்கள், கலாச்சார பாரம்பரியத்தை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது’ என்று பேசியுள்ளார்.

ஆனால் மேற்குறிப்பிட்ட வீடியோ கருத்தை எக்ஸ் பயனர் ‘@sujataindia1st’ 'டீப் ஃபேக்' தொழில்நுட்பத்தில், "நம் வேதனையான வாழ்க்கை, பயம், வேலையின்மை ஆகியவற்றைக் கொண்டாடுவது மோடிஜியின் நோக்கம் மற்றும் குறிக்கோள். ஏனெனில் நாம் அநீதியை நோக்கி முன்னேறி வருகிறோம்.

ஆனால் நாம் நமது வளர்ச்சி மற்றும் நீதியைக் கேட்பதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. நீதிக்கு வாக்களிக்கவும். காங்கிரஸுக்கு வாக்களிக்கவும்" என ரன்வீர் சிங் கூறுவது போன்று தயார் செய்து பரப்பியுள்ளார். ரன்வீர் சிங் இதை ஒருபோதும் சொல்லவில்லை. அவருக்கு எந்த அரசியல் கட்சியுடனும் எந்த தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தகவல் தொழில்நுட்பச் சட்டம் தொடர்புடைய இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் சம்பந்தப்பட்ட எக்ஸ் வலைதள பயனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை ஜுக்ஜீத் சிங் பாவ்னானி (இடது) உடன் நடிகர் ரன்வீர் சிங்

ரன்வீர் சிங் போன்று 'டீப்ஃபேக்' வீடியோ தயார் செய்து பரப்பப்பட்ட சம்பவம் இந்திய திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

x