மது பாரில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!


மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குமார் ரத்தோட்டிடம் விசாரணை நடத்தும் போலீஸார்.

மதுக்கடை பாரில் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டவரை 20-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து தாக்குதல் நடத்திய சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டம், கங்காவதி தாலுகாவில் ஸ்ரீராமநகராவில் உள்ள ஷைன் பாரில் இந்த சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. இந்த பாரில் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த குமார் ரத்தோட் என்பவர் மது அருந்திக் கொண்டிருந்தார்.

மது

அவர் திடீரென ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட ஆரம்பித்தார். அங்கிருந்தவர்கள் மது பாரில் இப்படியெல்லாம் முழக்கமிடக்கூடாது என்று குமார் ரத்தோட்டிடம் கூறினர். ஆனால், அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் போதையின் உச்சத்திற்கு சென்ற குமார் ரத்தோட், ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தை விடாமல் எழுப்பியுள்ளார்.

அப்போது திடீரென மது பாருக்குள் புகுந்த 20-க்கும் மேற்பட்டோர் குமார் ரத்தோட் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் குமார் ரத்தோட் காயமடைந்தார். இதனால் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது. இந்த தகவல் அறிந்த கங்காவதி புறநகர் போலீஸார் விரைந்து சென்று குமார் ரத்தோட்டை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கங்காவதி புறநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு வித்யாரண்யபுரத்தில் ஸ்ரீராம நவமியையொட்டி ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பிய இளைஞர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் தொடர்பாக போலீஸார் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், கங்காவதி தாலுகாவில் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x