மாணவியின் பாலியல் புகார்... கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் நடன பேராசிரியர் கைது... போலீஸ் அதிரடி!


கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் நடன பேராசிரியர் ஸ்ரீஜித்

திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் நடன பேராசிரியர் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை திருவான்மியூர் பகுதியில் கலாஷேத்ரா நடனக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.‌ இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ரா கல்லூரியில் படித்த மாணவி ஒருவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

அந்த மாணவி சில நாட்களுக்கு முன் சென்னை காவல் ஆணையருக்கு இமெயில் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் 15 வருடங்களுக்கு முன்பு தான் கலாஷேத்ரா கல்லூரியில் படித்த போது நடன பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீஜித்

அப்புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் மாணவியிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 15 வருடங்களுக்கு முன் நடன பேராசிரியர் ஸ்ரீஜித், மாணவியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீஸார் பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அடையாறில் தனியாக நடன பள்ளி நடத்தி வரும் கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் நடன பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவரை நேற்று இரவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்பு ஸ்ரீஜித்தை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கலாஷேத்ரா

கடந்த ஆண்டு கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கலாஷேத்ரா முன்னாள் மாணவி அளித்த புகாரில் மேலும் ஒரு முன்னாள் நடன பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x