ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை... காவல் துறை மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு!


கொலை செய்யப்பட்ட பிரவீன், தற்கொலை செய்த ஷர்மிளா

சென்னையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன் (26). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடையன் பேட்டை கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா(22) என்ற பெண்ணைக் காதலித்து வந்தனர். இதற்கு ஷர்மிளாவின் வீட்டார் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், பிரவீனும், ஷர்மிளாவும் பெரியார் திடலில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டதுடன், எழும்பூர் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்தனர். இதன் பின்னர் அவர்கள் இருவரும் பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவில் வசித்து வந்தனர். கூலி மற்றும் மெக்கானிக் தொழில் செய்து வந்த பிரவீன் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி இரவு 8:30 மணியளவில் பள்ளிக்கரணை பிரதான சாலையில் உள்ள தனியார் மதுபான விடுதிக்கு சென்றார். அப்போது 5 பேர் கொண்ட மர்மக் கும்பல் பிரவீனை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தது.

தாம்பரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து ஷர்மிளாவின் சகோதரரான ஜல்லடையம்பேட்டை முதல் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த தினேஷ் (எ) குட்டி அப்பு (23) மற்றும் அவரது நண்பர்களான சித்தலப்பாக்கம் இரண்டாவது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ்( 25), பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகர் 8வது தெரு பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன், பள்ளிக்கரணை 6வது குறுக்கு தெருவைச் சேர்ந்த ஜோதிலிங்கம் (25), சித்தலப்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபன் குமார் (24) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த நவம்பர் மாதம் தினேஷின் தங்கை ஷர்மிளா வீட்டின் எதிர்ப்பை மீறி பிரவீனை திருமணம் செய்து கொண்டதால் அவரை கொலை செய்தது தெரிய வந்தது. தலைநகர் சென்னையில் நடந்த இந்த ஆணவப் படுகொலை சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் தனது கணவர் ஆணவப் படுகொலைக்கு காரணமாக தனது தந்தை துரை, தாய் சரளா மற்றும் தனது மற்றொரு சகோதரர் நரேஷ் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதியவோ, நடவடிக்கையோ எடுக்கவில்லை என ஷர்மிளா மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காது என்று எண்ணி கடந்த 14-ம் தேதி அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பிரவீன், தற்கொலை செய்த ஷர்மிளா

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷர்மிளாவின் மாமனார், மாமியார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கழுத்து எலும்பு, நரம்பு, பாதிக்கப்பட்டதால் ஷர்மிளா கோமா நிலைக்குச் சென்றார் . இதையடுத்து அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஷர்மிளா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதை அமைப்பைச் சேர்ந்த வருண், " பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாதை அமைப்பினர் சட்ட ரீதியாக ஷர்மிளாவுக்கு உதவி செய்து வந்தனர். பள்ளிக்கரணை போலீஸார் தொடர்ச்சியாக இந்த ஆணவக்கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். முதல் தகவல் அறிக்கையில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரவீன் தந்தை கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது. ஏனெனில் பிரவீன் தந்தைக்கு ஆங்கிலமே தெரியாது" என தெரிவித்தார்.

மேலும், " குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது ஷர்மிளா மிரட்டப்பட்டதாகவும், பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமான ஷர்மிளாவின் பெற்றோர் துரை - சரளா மற்றும் அவரது அண்ணனான நரேஷ் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை" என்று கூறினார்.

"தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற மன உளைச்சலில் இருந்து வந்த ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்" என வருண் தெரிவித்தார்.

பிரவீன் சாதிவெறி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஷர்மிளாவின் தாய், தந்தை மற்றும் மற்றொரு அண்ணன் ஆகியோர் சேர்க்கப்பட வேண்டும், பிரவீன் இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும். ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வரும் பள்ளிக்கரணை காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என வருண் கேட்டுக் கொண்டார்.

சிபிசிஐடி

இது தொடர்பாக ஏற்கனவே பிரவீனின் தாய் தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம், தலைமைச் செயலாளர் அலுவலகம், தமிழ்நாடு காவல்துறை இயக்குநனர் அலுவலகம், தாம்பரம் காவல் ஆணையராகம் ஆகிய இடங்களில் கடந்த 22-ம் தேதி புகார் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

x