பள்ளி மாணவர் மத்தியில் மோதல்... கத்தியால் வெட்டியவர்களால் பதற்றம்!


பள்ளி மாணவர்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கத்தியுடன் மோதிக்கொண்ட பள்ளி மாணவர்களால் அங்கே பதற்றம் எழுந்துள்ளது.

சாலவாக்கம் அருகே தண்டலத்தில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவரின் 17 வயது மகன், ஒரக்காடு பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் தண்டலத்திலிருந்து ஒரக்காடு பள்ளிக்கு தினமும் சைக்கிளில் சென்று வருவது வழக்கம். நேற்று மாலையும் காலாண்டு தேர்வு முடிந்த உற்சாகத்தில் சக மாணவர்களுடன் சைக்கிளில் தண்டலம் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த இருவர், பிளஸ் 2 மாணவரை வழிமறித்து தாக்கினார்கள். கைவசம் வைத்திருந்த கத்தியால் பள்ளி மாணவரின் தலை மற்றும் உடலில் வெட்டிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். உடன் வந்த மாணவர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்போர் உதவியால், கத்திவெட்டு காரணமாக காயமடைந்த பிளஸ் 2 மாணவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கத்தி கொண்டு தாக்குதல்

இந்த சம்பவத்தில் பிளஸ் 2 மாணவர் படுகாயமடைந்ததோடு, தடுக்க முயன்ற சக மாணவர் ஒருவரும் கத்திவெட்டு காயத்தால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருவரிடமும் சாலவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில் வெட்டுப்பட்ட தண்டலம் பிளஸ் 2 மாணவருக்கும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இன்னொரு மாணவருக்கும் இடையே எழுந்த முன்பகையே புதிய மோதலுக்கு காரணம் என தெரியவந்தது. பத்தாம் வகுப்பு மாணவனின் அண்ணன் செங்கப்பட்டு பள்ளியொன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார். தம்பிக்காக அவர் தண்டலம் பிளஸ் 2 மாணவரை தட்டிக்கேட்க முனைந்ததில், கத்திவெட்டு வரை முற்றியிருக்கிறது.

இதனையடுத்து இருதரப்பு மாணவர்களுக்கும் ஆதரவாக வேறுசிலரும் திரண்டதில் அப்பகுதியில் பதற்றம் எழவே, அனைவரையும் போலீஸார் அழைத்து எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x