பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைய முயன்ற ட்ரோன்; பிஎஸ்எஃப் அதிரடி நடவடிக்கை!


எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள்

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற சீன தயாரிப்பு ட்ரோன், அதிலிருந்த ஹெராயின் ஆகியவற்றை எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்தது.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே பிஎஸ்எஃப் வீரர்கள் சந்தேகத்துக்குரிய பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற ஒரு ட்ரோன் மற்றும் அதில் கட்டப்பட்டிருந்த 500 கிராம் ஹெராயின் பாக்கெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக, பிஎஸ்எஃப் பஞ்சாப் எல்லைப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன்-ஐ சுட்டு வீழ்த்திய பிஎஸ்எஃப் வீரர்கள்

மீட்கப்பட்ட ட்ரோன் சீனாவில் தயாரிக்கப்பட்ட 'டிஜேஐ மாவிக் 3 கிளாசிக்' ஆகும். பிஎஸ்எஃப் படையினரின் உரிய நடவடிக்கையானது எல்லையைத் தாண்டி ட்ரோன் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளது.

பஞ்சாப்பில் 553 கி.மீ. நீளமுடைய, மாறுபட்ட, கடினமான மற்றும் சவாலான இந்தியா - பாகிஸ்தான் எல்லையைப் பாதுகாக்கும் பொறுப்பை பிஎஸ்எஃப் மேற்கொண்டு வருகிறது. இந்த பாதுகாப்புப் படை கடந்த 2023ம் ஆண்டில் பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 107 ட்ரோன்களை கண்டறிந்து சுட்டு வீழ்த்தியுள்ளது. மேலும் ட்ரோன்கள் மூலம் கடத்த முற்பட்ட 442.395 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்துள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்ட சீன தயாரிப்பு ட்ரோன்

இது தவிர, 23 ஆயுதங்கள், 505 தோட்டாக்களைக் கைப்பற்றிய பிஎஸ்எஃப், பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் 3 பேரை சுட்டுக் கொன்றது. மேலும், 23 பாகிஸ்தானியர்கள், 14 பங்களாதேஷ் பிரஜைகள் மற்றும் 35 கடத்தல்காரர்கள், 95 இந்திய சந்தேக நபர்களை பிஎஸ்எஃப் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x