சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!


பஞ்சாப் மாநிலத்தில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் குறித்து நிடக்கும் விசாரணை

பஞ்சாபில் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் இருவர் உயிரிழந்ததோடு, இருவர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சங்குரூர் பகுதியில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இங்கே 300-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 7 மணி அளவில் கைதிகளை அவர்களது அறைகளுக்கு அனுப்பும் பணியில் சிறைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு பிரிவு சிறைக் கைதிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில், உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சிறைக் காவலர்கள் நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்து பிற கைதிகளை அவர்களது அறைகளில் அடைத்தனர்.

இதனிடையே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் ஹர்ஷ் மற்றும் தர்மேந்தர் என்ற இரு விசாரணை கைதிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

ஜெகன்திப் சிங் மற்றும் முகமது செவாஸ் ஆகிய இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றம் இழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துணை மண்டல காவல்துறை தலைவர் சுரேந்திர சிங் சைனி தெரிவித்துள்ளார்.

x