காதல் கணவர் வேண்டும்! வீட்டின் முன்பு 35 நாட்களாக மனைவி தர்ணா! தடுக்கும் மாமனார், மாமியார்


பவித்ரா

காதல் திருமணம் செய்து தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த கணவன், தன்னை விட்டு பிரிந்த நிலையில் அவருடன் சேர்ந்து வாழ விரும்பி அதற்காக 35 நாட்களாக கணவர் வீடு முன்பாக இளம்பெண் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூரை சேர்ந்த முருகன் மகள் பவித்ரா, (23) இவர் பி.எஸ்சி மயக்கவியல் படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் மோகன் (26). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். இருவரும், 10 ஆண்டாக காதலித்து வந்த நிலையில் பெற்றோருக்கு தெரிந்ததும் 5 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் மோகனின் சகோதரிக்கு குழந்தை பிறந்ததால் அதைக் காண சொந்த ஊருக்கு மோகன் வந்துள்ளார். ஆனால் அதற்குப் பிறகு அவர் சென்னை திரும்பி வரவில்லை. மனைவியையும் தொடர்புகொள்ளவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த பவித்ரா வேலகவுண்டனுாரில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்தார். ஆனால், கணவரின் பெற்றோரான முருகன், சாரதா மற்றும் உறவினர்கள் அவரை பார்க்க அனுமதிக்கவில்லை. பவித்ரா கடந்த ஜூலை 24ல் சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

அதைத்தொடர்ந்து ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். கணவர், மாமனார், மாமியார் உள்பட 7 பேர் மீது மகளிர் போலீஸார் வழக்கு பதிந்தனர். ஆனாலும், பலன் கிடைக்காததால் பவித்ரா, வேலகவுண்டனுாரில் உள்ள கணவர் வீடு முன் உறவினர்களுடன், தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று 35வது நாளாக தர்ணா போராட்டம் நடந்தது. இதுகுறித்து பவித்ரா கூறுகையில், ''கடந்த ஆக. 23 முதல் தர்ணாவில் ஈடுபடுகிறேன். இடையில், 2 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு சென்றேன். கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அதற்கு வழி ஏற்படுத்தினால் போதும். அதுவரை போராட்டம் தொடரும்'' என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் ஸ்டாலினிடம் நேரிடையாகவே ரூ.1000 உரிமைத் தொகை கேட்ட பெண்கள்!

x