பிரதமர் மோடியை பார்க்கச் சென்ற வாலிபர் உயிரிழப்பு... பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி உயிரிழந்த சோகம்!


உயிரிழந்த மனோஜ் உண்ணி

கேரளாவில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி, தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று மாலை அவர் தனி விமான மூலம் கொச்சி வந்தடைந்தார். கொச்சியிலிருந்து சாலை மார்க்கமாக பிரதமர் நரேந்திர மோடி திருச்சூர் மாநிலத்திற்கு வருகை தந்தார். அவரது வருகையை ஒட்டி கொச்சி மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பிரதமர் நரேந்திர மோடி

குறிப்பாக அவரது கார் செல்லும் பாதையில், அவரை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் திரள்வார்கள் எனக் கருதி, போலீஸார் பல இடங்களில் தடுப்புகளை அமைத்திருந்தனர். சில இடங்களில் போலீஸார் கயிறுகளைக் கட்டி போக்குவரத்தை தடை செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் வடுகலா பகுதியைச் சேர்ந்த மனோஜ் உண்ணி என்ற இளைஞர், பிரதமர் நரேந்திர மோடியை பார்ப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வருகை தந்திருந்தார்.

உயிரிழப்பு

எம்.ஜி.,ரோடு பகுதியில் அவர் வந்த போது, பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாரையும் மீறி கயிறுகளைத் தாண்டி உள்ளே செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கயிறு அவரது கழுத்தில் சிக்கிக் கொண்டது. அதிலிருந்து அவர் விடுபட முயற்சித்த போது, அவர் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மனோஜ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கேரள மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x