ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது பாஜகவினர் தாக்குதல்... திருப்பூரில் பரபரப்பு; அதிர்ச்சி வீடியோ!


தாக்குதலுக்கு உள்ளான சங்கீதா

திருப்பூரில் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை, பிரச்சாரத்திற்கு வந்த பாஜகவினர் ஆபாச வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக அவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவரது கட்சியினரும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை ஆத்துப்பாளையம் பகுதியில் பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கடை வைத்து நடத்திவரும் சங்கீதா என்பவர் பிரச்சாரத்திற்காக வந்த பாஜகவினரிடம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் அங்கிருந்து பாஜகவினர் கிளம்பிச் சென்றுள்ளனர்.

ஆனால் சிறிது நேரம் கழித்து பிரச்சாரத்திற்காக வந்தவர்களில் சிலர், மீண்டும் சங்கீதாவின் கடைக்கு வருகை தந்துள்ளனர். அப்போது கடையில் தனியாக இருந்த சங்கீதாவிடம் அவர்கள் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ”சின்ன கடை வைத்திருக்கும் உனக்கு, ஜிஎஸ்டியால் என்ன பிரச்சினை?” என்று அவதூறாக பேசியுள்ளனர்.

இதற்கு சங்கீதா பதிலளிக்க முயற்சித்ததால் ஆத்திரமடைந்த அவர்கள், ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி அவரை கடுமையாக அடித்து தாக்கியுள்ளனர். பாஜகவினர் திரும்ப வருவதை அறிந்து தனது செல்போனில் அந்த காட்சிகளை சங்கீதா பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சங்கீதா அளித்த புகாரின் பேரில், 15-வேலம்பாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான சங்கீதா, திராவிடர் விடுதலைக் கழகத்தில் மாவட்ட அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பறக்கும் படையினரை மிரட்டியதாக வீடியோ வெளியாகியிருந்தது. இந்நிலையில் பாஜகவினர் பெண்ணை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தேர்தலில் தோல்வியடைந்துவிடுவோம் என்பது உறுதியாகிவிட்டதால், கோவையிலும் திருப்பூரில் வன்முறையை பாஜகவினர் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

x