தெலங்கானாவில் இருந்து ரயில் போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க போலீஸார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர்களைக கண்டறிந்து கைது செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ரயில் போதை மாத்திரைகள் கடத்தி வருவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் தனிப்படை போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது செகந்தராபாத்தில் வந்த பயணி 3 பேரை பின் தொடர்ந்து சென்றனர். அந்தக் கும்பல் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இறங்கி அஜாக்ஸ் பேருந்து நிலையம் சென்று பேருந்தில் ஏற முயன்றது. அப்போது தனிப்படை போலீஸார், அந்த மூன்று பேரையும் சுற்றி வளைத்து சோதனை நடத்தினர். அப்போது பையில் மறைத்து வைத்திருந்த 3030 தடைசெய்யப்பட்ட வலி நிவாரண மாத்திரைகள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
பின்னர் மூவரையும் திருவெற்றியூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நரேஷ்பாபு(24), லாசர்(22), ஜெகதீஷ்(23) என்பது தெரிய வந்தது. ரயில் மூலம் தெலங்கானா மாநிலம் சென்று வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவமனைகளுக்கு வாங்குவது போல் போலியான ஆவணங்களைக் காண்பித்து வாங்கி வந்து 3,000 ரூபாய் முதல் 4.000 ரூபாய் வரை சென்னையில் விற்பனை செய்தது வந்தது தெரியவந்தது.
அவர்கள் மூன்று பேரையும் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைதுசெய்யப்பட்ட லாசர் மற்றும் நரேஷ் பாபு மீது ஏற்கெனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.