வீட்டில் தீ விபத்து! கதவை உடைத்து 6 பேரை காப்பாற்றிய போக்குவரத்து காவலர்! வைரலாகும் வீடியோ


தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் போக்குவரத்து காவலர்.

ஹைதராபாத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. அப்போது போக்குவரத்து காவலர் ஒருவர், பொதுமக்கள் உதவியுடன் துணிச்சலாக செயல்பட்டு வீட்டுக்குள் சிக்கியிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டார்.

வீட்டினுள் சிக்கியவர்கள் மீட்பு.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் பரபரப்பான பகுதியான பஞ்சகுட்டாவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் 6வது தளத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

அந்த தளத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சிக்கியிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கட்டிடத்தின் மாடியிலிருந்து புகை வருவதை கண்ட அப்பகுதியினர் அங்கு குவிந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த பஞ்சகுட்டா போக்குவரத்து காவலர் ஷரவண்குமார், அப்பகுதி மக்களுடன் இணைந்து உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது காவலர் ஷரவண்குமார், கையில் கிடைத்த சிறிய கட்டை ஒன்றை கொண்டு மூடியிருந்த கதவை மேலும், கீழுமாக தட்டி உடைத்தார்.

பின்னர், துணிச்சலுடன் வீட்டின் உள்ளே சென்று அங்கு சிக்கியிருந்த குடும்பத்தினர் 6 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்த வீடியே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவரவில்லை. இந்த சம்பவம் குறித்து ஹைதராபாத் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x