கேரளாவில் 8 வயது மாற்றுத்திறனாளி மகளை கொலை செய்து கிணற்றில் வீசிய தாய், போலீஸில் சரணடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சிரையின்கீழு அருகே சிலம்பு பகுதியில் மினி (48) என்பவர் தனது 8 வயது குழந்தை அனுஷ்காவுடன் வசித்து வந்தார். குழந்தை அனுஷ்கா, மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத்திறனாளி குழந்தை ஆவார். தாமதமாக பிறந்த குழந்தை அனுஷ்கா மாற்றுத்திறனாளியாக பிறந்ததால், மினியின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் குழந்தையை தனியாக வளர்க்க மினி சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி, மினியும் அனுஷ்காவும் மாயமானதாக உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர். போலீஸார் இருவரையும் தீவிரமாக தேடிவந்த நிலையில், நேற்று மினி காவல்நிலையத்திற்கு வந்து சரணடைந்தார். அப்போது, தனது மகளை தலையணையால் அழுத்தி கொலை செய்து, அருகில் இருந்த கிணற்றில் தூக்கி வீசிவிட்டதாக மினி தெரிவித்ததால், போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, அவர் சொன்ன இடத்திற்கு சென்று பார்த்த போது, சிறுமி அனுஷ்கா கிணற்றில் சடலமாக மிதப்பது தெரியவந்தது. அவரது உடலை மீட்டுள்ள போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், மினி ஏன் அனுஷ்காவை கொலை செய்தார் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இயல்பு நிலை திரும்புகிறது... தூத்துக்குடியில் ரயில்கள் இயக்கம்... நெல்லையில் பள்ளிகள் திறப்பு!