பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இருவரை, கொல்கத்தாவில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்துள்ள ஒயிட் பீல்டில் ‘ராமேஸ்வரம் கஃபே' என்ற உணவகம் இயங்கி வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் மசாலா தோசைக்காக தினமும்ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிவார்கள்.
இந்நிலையில் மார்ச் 1-ம் தேதி பட்டப்பகலில் அடுத்தடுத்த குண்டுகள் வெடித்தன. இதில் பத்து பேர் படுகாயமடைந்தனர். இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பெங்களூரு போலீஸார், தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கர்நாடகா, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முசாவீர் ஷபீர் உசேனை என்ஐஏ அதிகாரிகள், டெல்லியில் கடந்த மார்ச் 26-ம் தேதி கைது செய்தனர். மேலும் கைதான முசாவீர் ஷபீர் உசேன் வீட்டில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், முக்கிய ஆவணங்கள், பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான அப்துல் மதீன் அகமது தஹா, முசாவிர் ஹூசைன் ஹாசெப்தான் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் குறித்து தகவல் தந்தால் 10 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று என்ஐஏ அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இவர்கள் இருவரையும் கொல்கத்தாவில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில், முசாவிர் ஹூசைன் ஹாசெப்தான் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வைத்தவர் என்றும், அப்துல் மதீன் அகமது தாஹா குண்டுவெடிப்பைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தல் ஆகியவற்றின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்வது ஏன்?... மத்திய பாஜக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி!
அமைச்சர் நேரு மகனுக்கு நெருக்கடி தரும் பாரிவேந்தர்... பெரம்பலூரில் சூரியனை நெருங்கும் தாமரை!