பிறந்து 39 நாட்களேயான தனது குழந்தையை 14வது மாடியில் இருந்து அவரது தாயே வீசி கொலை செய்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள முலுண்ட் வெஸ்டில் ஜாவர் சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியின் ஜன்னலில் ஒரு குழந்தை சிக்கியிருப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீஸார், அந்த குழந்தையை மீட்டு எம்டி அகர்வால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே அந்த குழந்தை உயிரிழந்தது.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த குடியிருப்பில் வசிக்கும் 28 வயது தாய் ஒருவர், 39 நாட்களேயான தனது குழந்தையை 14வது மாடியில் இருந்து வீசியது தெரிய வந்தது. செவித்திறன் மற்றும் பேச்சுக் குறைபாடுடைய அந்த பெண்ணின் ஏழு மாத மகன் 2022-ல் உணவளிக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து போய் உள்ளார்.
இதன் பின் அவரது தந்தை இறந்துள்ளார். இதன் காரணமாக அந்தப் பெண் மன அழுத்ததில் இருந்துள்ளார். இதன் காரணமாக குழந்தையை அவர் மாடியில் இருந்து வீசியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், "அந்த பெண் மீது கொலை வழக்கைப் பதிவு செய்துள்ளோம். தற்போது அந்த பெண்ணை அவரது குடும்பத்தினர் உதவியுடன் விசாரித்து வருகிறோம், அவரை கைது செய்வது குறித்து விரைவில் முடிவெடுப்போம்” என்றனர்.
14 வது மாடியில் இருந்து தனது குழந்தையையே தாய் வீசிக் கொலை செய்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.