குடிபோதையில் ஓட்டுநர்... பள்ளிப் பேருந்து கவிழ்ந்து 5 மாணவர்கள் உயிரிழப்பு!


விபத்தில் சேதமடைந்த தனியார் பள்ளிப் பேருந்து

ஹரியாணா மாநிலத்தில் இன்று காலை பள்ளிப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 15 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

ஹரியாணா மாநிலம் மகேந்திரகர் மாவட்டம், கனினா கிராமம் அருகே இன்று காலை, தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. அந்தப் பேருந்தில் 4ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் 40 மாணவர்கள் இருந்தனர்.

இந்த விபத்தில் 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மகேந்தர்கர் மற்றும் நார்னவுல் பகுதிகளில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டபோதிலும் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி இன்று இயங்கியுள்ளது. இச்சூழலில் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து

இதற்கிடையே இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் சிலர், பள்ளிப் பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக குற்றம் சாட்டினர். ஹரியாணா மாநில கல்வித் துறை அமைச்சர் சீமா திரிகா கூறுகையில், "துணை ஆணையர் மற்றும் மகேந்தர்கர் காவல் கண்காணிப்பாளரிடம் பேசியுள்ளேன். மாணவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளுக்கு போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.

பள்ளிப் பேருந்து கவிழ்ந்து 5 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் ஹரியாணாவில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x