சத்தீஸ்கரில் 50 அடி பள்ளத்திற்குள் பேருந்து கவிழ்ந்து 12 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி இரங்கல்!


கவிழ்ந்து கிடக்கும் பேருந்தில் மீட்புப்பணி

சத்தீஸ்கர் மாநிலத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் மூன்று பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நேற்று மதிய ஷிப்ட் இரவு 8 மணிக்கு முடிந்தது. பணி முடிந்த ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பேருந்துகள் சென்று கொண்டிருந்தன. அதில் 40 ஊழியர்களுடன் சென்ற ஒரு பேருந்து இரவு 8.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் துர்க் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர சுக்லா உள்ளிட்ட காவல் துறையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதற்கும் முன்னதாகவே உள்ளூர் மக்கள் பேருந்துக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் மூன்று பெண்கள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்படுவதையும் அவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த விபத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

x