தெலங்கானாவில் உள்ள ஒரு பள்ளியின் தரம் உயர்த்த 80,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரிகள் இருவர் உள்பட மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஃபரூக்நகர் மண்டலத்தில் உள்ள ஒரு பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும் என அப்பள்ளி நிர்வாகம் மனு செய்திருந்தது.
அப்போது ஹைதராபாத் பள்ளிக் கல்வியின் பிராந்திய இணை இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர் சாய் பூர்ண சந்தர்ராவ், அந்த பள்ளிக் கல்வி நிர்வாகி கே.சேகரிடம் 80,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த தொகையை ஹைதராபாத் பள்ளிக் கல்வி மண்டல இணை இயக்குநர் ஜக்ஜீவன் மூலம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம்ம் கே.சேகர் புகார் செய்தார். அதன்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கே.சேகரிடம் கொடுத்து கொடுக்கச் சொல்லியுள்ளனர். அதன்படி சேகரும் 80,000 ரூபாயை இன்று வழங்கிய போது சாய் பூர்ண சந்தர்ராவ், ஜக்ஜீவன் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும், களவுமாக கைது செய்தனர்.
மேலும் சேகரை சாய் பூர்ணசந்தர் ராவ் மற்றும் ஜக்ஜீவன் ஆகியோரிடம் அறிமுகப்படுத்தி அவருக்காக சில தொகை வசூலித்த இளநிலை உதவியாளர் சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் மூவரையும் போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.