உத்தராகண்டில் சோகம்: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்ததில் 8 பேர் பலி!


நைனிடால் மாவட்டத்தில் விபத்து மீட்பு பணி

உத்தராகண்ட் மாநிலத்தில் நேற்று இரவு பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

உத்தராகண்ட் மாநிலம், நைனிடால் மாவட்டம் பெட்டால்காட் பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் 200 மீட்டர் பள்ளத்தாக்கில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விட்டதாக உள்ளூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில், நேபாள நாட்டைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. விசாரணையில் இறந்தவர்கள் விஸ்ராம் சவுத்ரி (50), தீரஜ் (45), அனந்த்ராம் சவுத்ரி (40), வினோத் சவுத்ரி (38), உதய்ராம் சவுத்ரி (55), திலக் சவுத்ரி (45) கோபால் பஸ்னியாத் (60) மற்றும் ராஜேந்திர குமார் (38) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ராஜேந்திர குமார் பாஸ்கோட் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவர் தான் அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் என்பதும் தெரிய வந்தது.

விபத்து

மற்றவர்கள் அனைவரும் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் பெட்டால்காட் அருகே உள்ள உன்சாகோட் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இவர்களது பணி முடிவடைந்ததும், ஊருக்கு புறப்படுவதற்காக, வாடகை வாகனத்தை புக் செய்து சென்றுகொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் சாந்தி சவுத்ரி, சோட்டு சவுத்ரி, பிரேம் பகதூர் ஆகிய மேலும் 3 தொழிலாளிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பள்ளத்தாக்கில் வாகனம் கவிழந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x