அனுப்பானடி, சிந்தாமணியில் தொடரும் அட்டூழியம்: போதையில் வாகனங்களை சேதப்படுத்திய 4 பேர் கைது


மதுரை: மதுரை சிந்தாமணி பகுதியில் குடி போதையில் வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்திய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மதுரை சிந்தாமணி பகுதியில் மேட்டுத்தெரு புஞ்சை, குருநாதர் கோயில் தெரு, நடுத்தெரு காளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட 5 மேற்பட்ட தெருக்கள் உள்ளன.

இப்பகுதியில் 4 பேர் போதையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி திரிந்தனர். அவர்கள் திடீரென 50-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை ஆயுதங்களால் தாக்கி சேதப்படுத்தினர். இவர்கள் சேதப்படுத்திய பொருட்களின் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

போதைக்கு அடிமையான சமூக விரோதிகளின் செயலால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் வாகனங்களை வெளியில் நிறுத்த முடியாத சூழல் உள்ளது. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 4 பேரை கீரைத்துறை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் கூறியதாவது: சிந்தாமணி பகுதியில் இதுபோன்ற குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்க, கீரைத்துறை காவல் நிலைய எல்லையை கண்காணிக்கும் நுண்ணறிவு காவலர்கள் மற்றும் உளவுத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்து நடவடிக்கைக்கு உதவ தவறுகின்றனர்.

முன்பு போல போலீஸாரும் முறையாக ரோந்து வருவதில்லை. இதன் காரணமாகவே சிந்தாமணி , அனுப்பானடி பகுதிகளில் அடிக்கடி வாகனங்கள் எரிப்பு, சேதப்படுத்துதல் சம்பவங்கள் நடக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

x