செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளியில் தீ விபத்து: 10 டன் புத்தகங்கள் எரிந்து நாசம்


செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவில் அரசுப் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் புத்தகங்கள் எரிந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அனுமந்தபுரம் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள ராமானுஜம் பிளாக்கில், செங்கல்பட்டு கல்வி மாவட்ட அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு வழங்கப்படும் புத்தகங்கள் குடோன் உள்ளது. இதில் கடந்த 2018-19ம் ஆண்டு பழைய புத்தகங்கள் சுமார் 10 டன் குடோனில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 11 மணிக்கு புத்தகங்கள் வைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து தீடீரென புகை வெளியேறியது. இதனைக் கண்ட என். எஸ்.எஸ்., மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்த பள்ளியின் உதவி தலைமை வில்லியம்ஸ் காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எரிந்தன.

இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் நடத்திய விசாரணையில், மின் கசிவு காரணமாக அல்லது மர்ம நபர்கள் தீ வைத்தனரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விபத்து ஏற்பட்ட பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளியில் என்.எஸ்.எஸ் முகாம் நடைபெற்றதால் தீ விபத்து உடனடியாக கண்டறியப்பட்டு பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் தடுக்கப்பட்டது. இந்த விபத்து சதி செயலா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த புத்தகங்கள் அனைத்தும் 2018 - 19 ஆண்டுக்கான புத்தகங்கள். இந்த புத்தகங்களை எடுத்துச் செல்லும்படி பாடநூல் கழகத்திற்கு அறிவித்து கடிதம் அனுப்பப்பட்டு விட்டது. ஆனால், அவர்கள் இன்னும் அப்புறப்படுத்தவில்லை என ஆய்வு மேற்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தெரிவித்தார்.

x