திருவண்ணாமலை: புதுச்சேரியில் இருந்து செய்யாறுக்கு அரசுப் பேருந்தில் மதுபான பாட்டில்களை கடத்தி வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு மதுபான பாட்டில் கடத்தி வரப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், செய்யாறு பேருந்து நிலையத்தில் காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு காத்திருந்தனர். அப்போது, செய்யாறு அரசு போக்குவரத்து பணிமனைக்கு உட்பட்ட அரசுப் பேருந்து வந்து நின்றது. இதையடுத்து அரசுப் பேருந்தை காவல்துறையினர் சோதனையிட்டனர்.
இதில், அட்டை பெட்டிகளில் 500 மில்லி மற்றும் ஒரு லிட்டர் மதுபான பாட்டில்கள் என 19 லிட்டர் மதுபானம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. அரசுப் பேருந்தில் அட்டை பெட்டிகளில் மதுபானம் கடத்தி வரப்பட்டது குறித்து செய்யாறு ஜெயினர் கோயில் தெருவில் வசிக்கும் ஓட்டுநர் ஜனார்த்தனன் (44), ஆக்கூர் கிராமத்தில் வசிக்கும் நடத்துநர் முரளி (47) ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதில், நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இருவரும் புதுச்சேரியில் இருந்து செய்யாறுக்கு மதுபான பாட்டில்களை கடத்தி வந்ததும், இதேபோல் பலமுறை கடத்தி வந்து விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து செய்யாறு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநர் ஜனார்த்தனன் மற்றும் நடத்துநர் முரளி ஆகியோரை கைது செய்தனர். மேலும், கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.